|
தமிழ் இணைய இதழான தமிழ்த்திணையின் சார்பு அமைப்பான
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் சார்பில் 03.03.2007 சனிக்கிழமை
திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சேவை மைய வளாகத்தில் உள்ள ரோவர் அரங்கில் சமூக
மாற்றத்தில் தமிழ் இதழ்கள் என்னும் பொருண்மையில் கல்விசார் கருத்தரங்கம்
நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பேராளர்கள் பதிவு நடைபெற்றது. கட்டுரைகள்
எழுதிய 75 பேராளர்களில் 64 பேராளர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும்
கலந்துகொண்டார்கள்.
காலை 10.40 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்க நிகழ்வுகள் தொடங்கின.
இதழியல் கழகத்தின் பொருளாளர் பேரா.ம.இளையராஜா கருத்தரங்க நிகழ்வை வாழ்த்தி
அனுப்பிய செய்திகளைப் படித்தார். இணைய உலகில் பெரும் புகழ் பெற்றிருக்கும்
ஜெர்மன் வாழ் தமிழரான சுபாஷினிகனகசுந்தரம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
ஒலிபரப்பப்பட்டது. ஒலி வடிவ வாழ்த்துச் செய்தியின் இறுதியில், ".....இந்தக்கருத்தரங்கம்
எல்லா வகையிலும் வெற்றிபெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
வணக்கம். 01.03.2007 ஜெர்மனியிலிருந்து சுபாஷினிகனகசுந்தரம்" என்று முடிந்தவுடன்
அரங்கம் முழுமையும் கரவொலியால் நிறைந்தது.
இதழியல் கழத்தின் தலைவரும் தமிழ்த்திணையின் ஆசிரியருமான ஏவிசி கல்லூரித் தமிழ்
உயராய்வு மைய இணைப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார்.
தமிழின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
என்ற முனைவர் இராதாசெல்லப்பன் அவர்களின் அறிவுரைப்படி தமிழ்த்திணை தமிழ் ஆய்வு
இணைய இதழ் தொடங்கப்பட்டதாகவும், தமிழ் ஆய்வு உலகில் இதழியலுக்கென ஓர் ஆய்வு
அமைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இதழியல் கழகம் தொடங்க முனைவர்
இராம.சுந்தரம் அவர்கள் வழங்கிய அறிவுரைகளையும் வரவேற்புரையில் முனைவர்
தி.நெடுஞ்செழியன் சுட்டிக்காட்டினார். மேலும் ஆய்வுக்கோவை, மின்-நூல், இணையப்
பதிவேற்றம் என்னும் இப்புதிய முயற்சிகளை வாழ்த்திட பாரதிதாசன் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் அவர்களை அழைத்தபோது, மனமுவந்து ஏற்றுக்கொண்டு வருகை தந்தமையை
முனைவர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டபோது அரங்கின்கண் அமர்ந்திருந்த அனைவரின்
பார்வையும் துணைவேந்தர் முனைவர் சி.தங்கமுத்து அவர்கள் மீதே பதிந்திருந்தது.
பார்வையைப் பதித்தவர்களுக்குத் துணைவேந்தர் புன்னகையைப் பதிலாகத்
தந்துக்கொண்டிருந்தார்.
விழா நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல்தமிழ் மற்றும்
தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவரும் தமிழ்த்திணை மற்றும் இதழியல் கழக
நெறியாளருமான முனைவர் கு. அண்ணாதுரை உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், ''அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து, தகவல் தொடர்பால் உலகம்
உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட வேளையில், நம்முடைய செயல்கள் அனைத்தும் அதற்கு
ஈடாக வேகம் கொள்ளவேண்டும். அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தற்போது
இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற புதிய முயற்சிகளை
ஆய்வு உலகம் வரவேற்கவேண்டும். இளைய தலைமுறையைச் சார்ந்து பேராசிரியர்கள்
நெடுஞ்செழியன், அருணாசலம், வாசுதேவன், இளையராஜா, வே.கண்ணையன், உ.பிரபாகரன்
ஆகியோர் இதழாளர் அன்பழகன், சீரிதழாளர் தி.மா.சரவணன் ஆகியோரோடு இணைந்து
செயல்பட்டு இக்கருத்தரங்கை நிகழ்த்திக் கொண்டிருப்பது உண்மையில் பாராட்டப்பட
வேண்டியது. பெரிய நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து எந்தவித நிதியுதவியும்
பெறாது ஆய்வாளர்களின் கூட்டுமுயற்சியால் இக் கருத்தரங்கம் நடைபெறுவது மற்றொரு
சிறப்பு. இளைய தலைமுறையின் பாய்ச்சலுக்கு வழி வகுத்துக் கொடுத்து வாழ்த்துவோம்''
என்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.தங்கமுத்து அவர்கள் 75 கட்டுரைகள்
அடங்கிய 300 பக்க இதழியல் ஆய்வுக்கோவையை வெளியிட்டார். திருச்சிராப்பள்ளி
மேலசிந்தாமணியில் உள்ள அன்னம் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விஜயாசெல்வக்குமார்
தம்பதியினராய் வந்து பெற்றுக் கொண்டனர். அடுத்து மின்-நூல் வெளியீடு நடைபெற்றது.
மின்-நூலை மகாகவி பாரதியாரின் பேத்தியும் தமிழில் முதல் முனைவர்ப் பட்டம் பெற்ற
பெண் என்னும் பெருமை பூண்ட விஜயபாரதியும் ஏவிசி கல்லூரி, திருச்சி தூய வளனார்
கல்லூரி, கனடா வான்கூர் பல்கலைக்கழகம் இவற்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி
ஓய்வு பெற்றிருக்கும் விஜயபாரதியின் வாழ்க்கைத் துணைவர் பி.கே.சுந்தரராஜனும்
இணைந்து தம்பதியினராய் பெற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து, பாரதிதாசன்
பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவரும், உலக அளவிலான தமிழ் இணைய அமைப்பின்
பொறுப்பாளரும் தமிழறிஞர் வையாபுரிபிள்ளை அவர்களின் பேத்தியுமான முனைவர்
இரதாசெல்லப்பன் அவர்கள் 75 கட்டுரைகளைத் தமிழ்த்திணை இணைய தளத்தில் பதிவேற்றம்
செய்து வைத்தார்.(முனைவர் இராதாசெல்லப்பன் அவர்கள் தன் வாழ்க்கைத் துணைவர்
தமிழறிஞர் க.சிவராஜப்பிள்ளை அவர்களின் பேரனுமான பெறியாளர் செல்லப்பனுடன்
வந்திருந்தார்). மேடையில் தன்னருகே அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இராதாசெல்லப்பன்
அவர்கள் அழைத்து, ஆய்வுக்கோவை, மின்-நூல் இவற்றைப் பெற்றுக்கொள்ள வந்தவர்கள்
தம்பதியினராய் வந்தது சிறப்பு என்று கூற நெடுஞ்செழியன் முகத்தில் ஒரு வெற்றி
பெருமிதம் வெளிப்பட்டது என்பது மிகையில்லை.
வாழ்த்துரையில் இராதாசெல்லப்பன் அவர்கள், "உண்மையில் இது ஒரு புதிய முயற்சி.
அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், இணைய ஊடகம் என்னும் மூன்று ஊடகங்களில் 75
கட்டுரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இணையத்திலும் கட்டுரைகள் என்னால்
வெளியிடப்பட்டுள்ளன. இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இக்கட்டுரைகளை இந்த
நிமிடம் முதல் உலகில் எந்தப் பகுதியிலிருந்தும் உடனே படிக்கமுடியும். மேலும்
இணையத்தில் தமிழ் எழுத்துரு இல்லாமலே தமிழ் எழுத்துகளைப் படிக்கும் யூனிக்கோடு
முறையில் இக்கட்டுரைகள் வெளியிட்டப்பட்டுள்ளன. யூனிக்கோடு குறித்து தமிழகத்தில்
அவ்வளவு அறிமுகம் இல்லாத நிலையில் முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் தம்
நண்பர்களுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இந் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது
என்பது பாராட்டுக்குரியது. அச்சு நூல், மின்-நூல், இணையம் இவற்றிக்கு தமிழ்
யூனிக்கோடு எழுத்துருவைப் பயன்படுத்தியிருக்கும் முதல் முயற்சி தமிழ் ஆய்வு
உலகிற்குத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு புதுமை என்றே கூறலாம். இதுபோன்ற
புதிய முயற்சிகளைக் கல்லூரி, பல்கலைக்கழக, ஆய்வு நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டும்"
என்றார். என்னுடய ஆய்வு மாணவர் நெடுஞ்செழியன் என்று இராதாசெல்லப்பன் அவர்கள்
வாழ்த்துரையில் குறிப்பிட்டபோது அரங்கில் கைத்தட்டல்கள் எழுந்தன.
தந்தை பெரியார் அவர்கள் குடி-அரசு இதழ் வெளிவந்து 80 ஆண்டுகள் நிறைவையொட்டி
சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்கள் என்னும் பொருண்மையில் இக்கருத்தரங்கம்
நடைபெறுவதால், இக்கருத்தரங்கின் மையக் கருத்துரையை வழங்க, பாரதிதாசன்
பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையப் பேராசிரியர் அறிஞர் எஸ்.வி.இராஜதுரை
அவர்கள் வருகை தந்திருந்தார். தமிழ் ஆய்வு உலகம் அறிந்த நேர்மையான சிந்தனையாளர்,
பெரியாரியம் குறித்து மிகச்சிறந்த நூல்களை வெளியிட்டவர் என்னும் இளையராஜாவின்
அறிமுகத்தோடு எஸ்.வி.ஆர். உரையாற்ற வந்தார். அவரை முதன்முறையாக காணும்
வாய்ப்பைப் பெற்றதாக பேராளர்கள் பெருமையோடு பேசிக் கொண்டதை அரங்கம் முழுமையும்
செவிமடுக்க முடிந்தது. எஸ்.வி.ஆர் . ஏறத்தாழ 80 நிமிடங்கள் உரையாற்றினார்.
அவரின் அறிவோட்டம் மிக்க உரையால் அரங்கம் அமைதியாக இருந்தது. தந்தை பெரியார்
அவர்கள் குடி-அரசு இதழ் தொடங்கியது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார்
பிரச்சனைகளை தந்தை பெரியார் முன் வைத்தது. இதழியல் துறையில் விற்பனையை மையமாகக்
கொண்டிருப்பதை மாற்றி கருத்தியலை மையப்படுத்தியவர் தந்தை பெரியார். தான்
ஏற்றுக்கொண்ட கருத்தை யாருக்கும் அஞ்சாது உரைத்தவர் என தந்தை பெரியார் என
இதழியல் துறையின் பெரியாரின் பன்முகத்தைப் பேராளர்களிடம் வெளிப்படுத்தினார்.
உரையின் இடையே கருத்துகளை கூறும்போது அதற்கான ஆதாரங்களைப் படித்துக் காட்டினார்.
அடுக்கி வைத்திருந்த ஆதாரங்களைத் தேடும்போது சில சில நொடிகள் உரையில் ஆங்காங்கே
தேக்கம் ஏற்பட்டது என்றாலும் உரையின் செறிவிற்கு இடையூறாக அமைந்திருக்கவில்லை.
உரையாற்றி எஸ்.வி.ஆர். அமர்ந்தபோது பேராளர்கள் அனைவருக்கும் ஒரு புத்தம்புதிய
அனுபவம் கிடைத்த மகிழ்ச்சி மனசெங்கும் படர்ந்திருந்தது என்பதை அவதானிக்க
முடிந்தது.
தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறப்புரை நிகழ்த்தினார். இக்
கருத்தர நிகழ்வில் அச்சில் ஆய்வுக்கோவை, குறுந்தகட்டில் மின்நூல், இணையத்தில்
கட்டுரைகள் பதிவேற்றம் என தமிழ் வளர்ச்சிக்கான புதிய முயற்சிகளை பேராசிரியர்
நெடுஞ்செழியன் அவர்கள் இங்கே தம் தோழர்களுடன் நிகழ்த்தியுள்ளார் என்பது
உண்மையில் பாராட்டிற்குரியது. நெடுஞ்செழியன் அவர்களைப் பல ஆண்டுகாலம் நன்கு
அறிந்துள்ளேன். பெரியாரியக் கொள்கைகளை வாழ்க்கையின் நடைமுறையாகக் கொண்டு வாழும்
பகுத்தறிவும் சுயமரியாதையும் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதை
நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட இந்த
அறிவார்ந்த போக்கு அனைத்து நிலைகளிலும் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் எடுத்த அனைத்து முயற்சிகளையும்
மனமுவந்து நெஞ்சம் நிறைய வாழ்த்தினார். மேலும் தற்கால இதழியல் போக்குகளின் நல்ல
அம்சங்களைப் பாராட்டியும் தேவையில்லாத மிகைப்படுத்தக்கூடிய அம்சங்களைக்
கண்டித்தும் சமூக மாற்றத்திற்குத் துணையாக இதழியல் இருக்கவேண்டும் என தன்
அறிவார்ந்த உரையின் மூலம் பல செய்திகளைச் சுட்டிக்காட்டினார்.
விழா நிகழ்வில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும்
நண்பகல் விருந்து வழங்கப்பட்டது. பின்னர் 2.00 மணியளவில் அமர்வுகள் தொடங்கின.
மாலை 4.30 மணிக்குள் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத் துறைத்
தலைவர் முனைவர் அ. அந்தோனிகுருசு, ஏவிசி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர்
சாமி.கிருட்டினமூர்த்தி, பேராசிரியர் தமிழ்வேலு ஆகியோரை அமர்வு தலைவர்களாகக்
கொண்டு மூன்று அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில் ஏறத்தாழ 40 கட்டுரைகள்
வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. மாலை தேநீருக்கப் பின் நிறைவு விழா தொடங்கியது.
விழாவிற்குத் திராவிட இயக்கச் சிந்தனையாளர் புலவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கப் பேராளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார்
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநர் பாஸ்கரன் அவர்கள். தொடர்ந்து
விழா நிறைவு பேரூரையாற்றினார் முனைவர் இராம.சுந்தரம். இன்றைக்குப் பரவலாக
விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பல செய்திகள் இதழ்களில் வெளிவந்தவை என்று
குறிப்பிட்டார். இயல்பியல் என்ற சொல் செந்தமிழ்ச்செல்வி என்ற இதழில்தான் முதலில்
பயன்படுத்தப்பட்டது. பரிதிமாற் கலைஞர் தமிழ்ச் செம்மொழி என்பதை ஒரு இதழில்தான்
எழுதி வெளியிட்டார். இப்படி மக்களின் கருத்துக்களையும், மக்களிடம்
கருத்துருவாக்கம் ஏற்படவும் இதழ்கள் பங்காற்றிய பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டி
ஆய்வாளர்களைச் சிந்திக்கவும், திகைக்கவும் வைத்தார் என்றால் மிகையில்லை. நிறைவு
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசுகளை
வழங்கியும் பேராசிரியர்கள் முனைவர் கா.வாசுதேவன், முனைவர் உ.பிரபாகரன் ஆகியோர்
சிறப்பித்தனர். இறுதியில் பேராசிரியர் வே.கண்ணையன் நன்றி கூறினார். விழா இனிதே
நிறைவடைந்தது. விழாவின் அனைத்து சிறப்புகளுக்கும் காரணமாக அமைந்த திருச்சி
பேராசிரியர்கள் முனைவர் கா.வாசுதேவன், முனைவர் மு.அருணாசலம் மற்றும் இணைய
வடிவமைப்பாளர் பொறி.அ.முருகசுவாமிநாதன் - ஆகியோர் அனைவராலும் பாராட்டப்பெற்றனர்.
தொகுப்பு: கனகசபை, வெற்றிவேலன்
முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் உயராய்வு மையம்,
ஏவிசி கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை. |

நெறியாளர் - தலைமையுரை

ஆய்வுக்கோவை வெளியிடல்

மின்-நூல் வெளியிடல்

இணையப் பதிவேற்றம்

மையக் கருத்துரை - எஸ்.வி.ஆர்.

வாழ்த்துரை - பி.கே.எஸ்.

பேராளர்களை வாழ்த்தும் பாஸ்கரன்

நிறைவுரை - ஆர்எம்.எஸ்

அரங்கம் நிறைந்த பேராளர்கள்

வரவேற்புரை

கூர்ந்து நோக்கும் பேராளர்கள்

பொருளாளர் - இணைய வடிவமைப்பாளர்

நன்றியுரை - தி.மா.ச.

முனைவர் அ.குருசு தலைமையில் அமர்வு

கருத்தரங்க வெற்றியின் வேர்கள் |