புதியபார்வை வெளியிடாதது
அன்புள்ள புதியபார்வை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
கண்ணகி சிலை தொடர்பாக, ஞாநி எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றி எழுதிய திருச்சி தி.அன்பழகன் கட்டுரையைப் படித்தேன். தொடர்ந்து ஞாநியின் விளக்கங்களையும் படித்தேன். ஞாநியின் விளக்கங்கள் குறித்து என் எதிர்வினையைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஞாநியின் விளக்கங்களின் சாரம் :
1. கண்ணகியைத் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக ஆட்சியாளர்கள் மக்கள் மீது திணிப்பது கண்டத்திற்குரியது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கருத்துக்களின் சாரமாகும்.
2. பார்ப்பன், தமிழின் எதிரி என அவதூறு செய்கிறார்கள்.
3. தமிழ் அறிஞர்கள் யாரும் சரியாக இன்று வரை என் கருத்துக்குப் பதில் இல்லை. திரிபு வாதங்களில் திளைக்கிறார்கள்.
4. தமிழ்ப் பண்பாட்டு விரோதி, அறிவிலி, கோட்டி, விஷமி என மிரட்டுகிறார்கள். பெரியாரும் அண்ணாவும் பாடுபட்டதெல்லாம் பதர்களின் விளைச்சலுக்காகவா?
5. நாளாயினி, பாஞ்சாலி, சீதை, அலிகை, அனுமன்களை விமர்சிக்கவில்லை என்னு அசட்டுத்தனமாகக் கேட்கப்படுகிறது.
6. கண்ணகி போன்ற குறியீடுகள் இருண்ட காலத்துக்கே அழைத்துச் செல்லும் ஆபத்தில் முடியும்.
7. பெரியார் என் போன்றோருக்குக் காட்டிய வழி.
கண்ணகி சிலையை மீண்டும் வைத்ததில் ஞாநி எழுப்பிய வினாக்களின் மைய இழை கண்ணகியைத் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக திணிக்கப்படுகிறது என்பதுதான். திருச்சி தி. அன்பழகன் எழுதிய கட்டுரையில் கி.பி.2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகக் கண்ணகி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதை வரலாற்றுச் சான்றாதாரங்களோடு விளக்கி நிறுவியுள்ளார். ஞாநியால் ஆட்சியாளர் என மாற்றிச் சொல்லப்படும் கலைஞர் அவர்களால் திணிக்கப்படவில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அகற்றப்பட்ட சிலையை மீண்டும் நிறுவுவதே கலைஞரின் நோக்கமாகும் என்பதை ஞாநி உணர தவறுவதேன்?
தமிழறிஞர்கள் சரியாக கருத்துக்களை வைக்காமல் திரிபு வாதங்களில் திளைக்கிறார்கள் என்பது ஒருகால் உண்மையாககூட இருக்கலாம். திருச்சி தி.அன்பழகன் முன்வைத்த வாதங்களில் உள்ள திரிபுகள் எவைஎவை? அன்பழகன் திளைக்கவில்லையே. முறையாகவும் பொறுமையாகவும் அடக்கத்தோடும் பணிவோடும் தானே பதில் கூறியுள்ளார். பெண்களைச் சிறப்பித்த காப்பியம் என்றும் அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார். ஞாநியின் விளக்கத்தில் இதனை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் தமிழ்ப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில், பதில் சொல்லும் தமிழறிஞர்களைக் கண்ணகியின் இரசிகர்கள் என விளிப்பது ஞாநியின் இதழியல் அறத்திற்கு அழகு செய்யுமா?
சமூக அரசியல், ஓட்டு அரசியல், அதிகார அரசியல் போன்றவற்றை அறிந்திருக்கும் ஞாநி பண்பாட்டு அரசியலை அறிந்துகொள்ளமுடியாது. பண்பாட்டு அரசியல் என்பது மற்ற அரசியல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. காரணம் பண்பாட்டைக் கட்டமைப்பது மொழியாகும். தாய்மொழி உணர்வின் வழியாகவே பண்பாட்டை அறிந்துகொள்ளமுடியும். ஐரோப்பியப் பண்பாட்டில் உதட்டோ டு உதடு முத்தமிடுவதை நாம் ஆபாசம், அசிங்கம், செக்ஸ் என்கிறோம். தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் ஒரே படித்துறையில் ஆணும் பெண்ணும் நீராடுவதை நாகரிகமற்றது எனப் பிற நாட்டவர் கருதுகின்றனர். பிறப்பால் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஞாநியால் தமிழ்ப் பண்பாட்டு அரசியலை புரிந்துக்கொள்ள இயலாது என்பதற்கு மரபியல் ஓர் அடிப்படைக் காரணமாகும். தமிழ் மொழி பேசக்கூடியவர்களின் மரபணுவும் ஆப்பிரிக்காவில் சுவாகினி மொழி பேசக்கூடியவர்களின் மரபணுவும் ஒத்துப் போகின்றன.
மேலும் இருமொழி பேசக்கூடியவர்கள் உலகின் தொன்மையான நீக்கோயிகள் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் ஆப்பிரிக்கவின் தென்முனையும் இலங்கைத் தீவும் தமிழகத்தின் தென்முனையும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பது க.ப.அறவாணன் செய்திகள் வழி அறியமுடிகின்றது. இந்நிலையில் தமிழ்ப் பண்பாட்டை, அது முன்வைக்கும் அரசியலை அறிந்துகொள்ள பொதுஅறிவு என்பதைத் தாண்டி தாய்மொழி என்னும் தமிழணர்வு அடிப்படைத் தேவையாகும். அதனால் ஞாநியைத் தமிழ் விரோதி, பார்ப்பான் என்று தவறாக யாரும் விமர்சிக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. இப்படி விமர்சிப்பதால் தமிழன் என ஞாநி அடையாளப்படுத்திக் கொள்ள தேவையுமில்லை. ஞாநியின் வாதம் விதண்டாவாதமாக இருப்பதால் முரட்டுவாதம் செய்கிறார்கள் என்பதை ஞாநி அறியவேண்டும்.
மேலும் கண்ணகி சிலை மீண்டும் அமைக்கப்படும் என்ற கலைஞரின் அறிவிப்பினைத் தொடர்ந்து கண்ணகியை முட்டாள் என்றும் கற்பு, பத்தினி என்பதெல்லாம் கற்பிதம் என்றும் பெரியார் கண்ணகியை கடுமையாக எதிர்த்தார் என்று ஏற்றுக் கொள்ளாதப் பெரியாரைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஜோதிலதாகிர்ஜா, இராஜம்கிருஷ்ணன், சுந்தரராமசாமி, சோ மற்றும் திண்ணை இணைய இதழ் எழுத்தாளர்கள் என அனைவரும் பார்ப்பனர்கள் என்பதை உணரும்போது பெரியாரைப் போற்றும் பார்ப்பனராக ஞாநி அறியப்படுவதில் வியப்பில்லை. பதர்களின் விளைச்சலுக்குப் பெரியாரையும் அண்ணாவையும் துணைக்கழைக்கும் ஞாநி ஒன்றை மறந்துவிட்டார். கண்ணகி சிலையை 2ஆம் உலகத் தமிழ்மாநாட்டின்போது கடற்கரையில் வைத்தவர் இதே அண்ணாதான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உலகப் பண்பாட்டை நாகரிகத்தை காலச்சாரத்தை சமூக இயங்கியலை அறிந்த அண்ணாதான் கண்ணகிக்குச் சிலை வைத்தார். கலைஞர் அல்ல.
கண்ணகியை விமர்சிக்கும் ஞாநி நளாயினி,பாஞ்சாலி,சீதை,அகலிகை, அனுமன்களை விமர்சிக்கவில்லை என்று கேட்பது எப்படி அசட்டுத்தனமாகும் என்பது புரியவில்லை. அறிவுக்குப் புறம்பானது, அறிவற்ற, அறிவுக்கு ஒவ்வாத என்னும் சொற்கள் இருக்க அசட்டுத்தனம் அவரின் குருதியிலும் குரோமோசோமிலுள்ள ஆர்என்ஏ,டிஎன்ஏவிலிருந்து வெளிப்பட்டிருக்கவேண்டும். விமர்சனம் செய்திருந்தால் இவ்வாறு விமர்சனம் செய்திருக்கிறேன் எனச் சுட்டவேண்டும். இல்லையெனில் இன்ன காரணங்களால் விமர்சிக்கவில்லை என்பதை விளக்கவேண்டும். அதைவிடுத்து தப்பிக்கும் மனோபாவத்துடன் பதில் கூறுவது நாகரிகமாகாது. ஐந்து ஆண்ணுக்கு ஒரு பெண் மனைவி. உடல் ரீதியாக இதுசாத்தியமா? இந்தியப் பண்பாட்டின் அடையாளம் மகாபாரதம் என வரலாற்றைப் புரட்டி பொய்யுரைக்கும்போது விமர்சனத்திற்குட்பட்டதுதானே? பொத்தாம் பொதுவில் தங்கத்தட்டு, மலம் என உவமான உவமேயங்கள் எதற்கு?
கண்ணகி போன்ற குறியீடுகள் நிகழ்காலத்தின் பேராபத்துகள் என ஞாநியின் தேவையற்ற அலறல் மிகை கற்பனையின் உச்சம். முத்துலட்சுமிரெட்டியையும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரையும் ஒதுக்கி வைத்துவிட்டு கண்ணகியை மட்டும் உயர்த்திப் பிடிப்பதாய் ஞாநி எண்ணுவது அவரது மனக்கோணலை வெளிப்படுத்துகின்றது.
மத அரசியலுக்கு சாதி அரசியலுக்கு அதிகார அரசியலுக்கு ஓட்டு அரசியலுக்கு எதிராக பெரியார் காட்டிய வழியில் பயணம் செய்துக்கொண்டிருக்கும் ஞாநி எல்லா நிலைகளிலும் பெரியாரின் வழியைப் பின்பற்றுகின்றாரா? அல்லது தேவையான வழிக்கும் மட்டும் பெரியாரைப் பயன்படுத்துகின்றாரா? எல்லாவற்றுக்கும் மேலாக 1970களில் தந்தை பெரியார் விடுதலை நாளேட்டில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை முன்வைத்தாரே அந்தத் தமிழ்த்தேசியம் குறித்து ஞாநியின் பார்வை என்ன? பெரியார் சொன்னவையெல்லாம் நல்லவை என்றால் தமிழ்த்தேசியமும் நல்லவைதானே? தமிழ்த்தேசியம் இந்திய தேசியத்திற்கு எதிரானது மட்டுமல்ல, பார்ப்பனர்களுக்கு எதிரானது என்பதுதானே அதனுள் அடங்கி கிடக்கும் உண்மை. ஞாநி தன்னைப் பார்ப்பனராக உணராதவராகவும் ஏற்காதவராகவும் இருக்கலாம். தமிழ்ப் பண்பாட்டு அரசியலை எதிர்ப்பதன் மூலம் தன்னைப் பார்ப்பனராக வெளிகாட்ட முயற்சிக்கின்றார் என்றே அவதானிக்க முடிகின்றது. தமிழ்ப் பண்பாடு உயர்ந்தது என்றால் ஆரியப் பண்பாடு தாழ்ந்தது என்றுதானே விடை கிடைக்கும்.