Tamilthinai - Tamil Research Oriented Website
Tamilthinai Team Essays Book Intro Magazine Intro Seminar Tamil Research

இன உணர்வும் மொழியுணர்வும் வரலாற்றோடு இணையட்டும்

திருமறைகாடு வேண்டாம் -  மரைக்காடு வேண்டும்

பெறுநர்

ஆசிரியர் அவர்கள்
தினமணி நாளிதழ்
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 056.

அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
04.06.2008 நாளிட்ட தினமணி நாளிதழின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட செய்திகளில், நாகை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் வேதாரண்யம் என்று தற்போது அழைக்கப்படும் ஊரின் பெயரைத் திருமறைக்காடு என தமிழ்நாடு அரசு மாற்றிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
வேதாரண்யம் நகர்மன்றத் தலைவராய் பொறுப்பேற்றிருக்கும் முதுபெரும் திராவிட இயக்க சிந்தனையாளர் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள்கூட கடந்த சில திங்களுக்கு முன்னர் திருமறைக்காடு என மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேண்டுகோளும், மா.மீனாட்சிசுந்தரத்தின் வேண்டுகோளும் வரலாற்றை அறியாமல் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் கண்டு அதிர்ச்சியடைந்தேன். தமிழ்ச் செம்மொழி தகுதி பெற இந்தியத் தலைநகர் தில்லி வரை சென்று வேண்டுகோள் விடுத்தவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் என்பதையும், தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட காரணமாக இருந்த கலைஞரைத் தலைவராகக் கொண்டவர் மா.மீனாட்சிசுந்தரம். இவர்கள் தமிழ், தமிழர்களின் வரலாற்றை அறியாது வேண்டுகோள் விடுப்பது என்பது தமிழின வரலாற்றைத் தவறாக புரிந்துகொள்ளவே துணைசெய்யும்.
மரைக்காடு என்பதுதான் ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் மறைக்காடு என்று மாற்றம் செய்யப்பட்டது. (மயிலாடுதுறை மாயவரம் ஆனாதுபோல்) சைவ சமயத்தின் செல்வாக்கினால் திரு என்று முன்னொட்டைப் பெற்று பிறகு திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டது. தமிழகத்தின் ஊர்பெயர்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டபோது திருமறைக்காடு என்பது வேதம்(மறை) ஆரண்யம்(காடு) என்று அழைக்கப்பட்டது. முதன் முதலில் வழங்கப்பட்ட மரைக்காடு என்பதற்குப் பொருள் என்னவெனில், மரை என்பது மான்களைக் குறிக்கும், குறிப்பாக கடல் சார்ந்து வாழும் மான்களையும் அதிலும் ஒற்றைக் கொம்புடைய மான்களை குறிக்கும். ஸ்குரு ஆணியை கவிழ்த்து வைத்தார்போல மானின் நெறியில் அந்த ஒற்றைக் கொம்பைக் கொண்ட மான்கள் இன்றைக்கும் வேதாரண்யம் கடல் சார்ந்த சதுப்புநில காடுகளில் அதிகம் என்பதை உணரவேண்டும். இந்த வகை மான்கள் வேறு எந்த பகுதியிலும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தாமரை என்பதற்கு தாவும் மான் என்ற பொருளும் உண்டு. மான்கள் நிறைந்து வாழும் காடு என்ற பொருளில்தான் மரைக்காடு என்ற பெயர் அமைந்திருந்தது. இந்த வரலாறுதான் ஆரியர்களால் மாற்றம் செய்யப்பட்டது என்பதை அறியாது திருமறைக்காடு என அழைக்க வேண்டுகோள் விடுப்பது பொருத்தமற்றது மட்டுமல்ல பொருளற்றதாகும். மரைக்காடு என்றழைக்க வேண்டுகோள் விடுப்பது பொருத்தமானது, பொருள்பொதிந்தது என்பதைவிட இன வரலாற்றை மீட்டெடுக்கும் அரிய செயலாகும்.
நன்றி.
தமிழன்புடன்,
(தி.நெடுஞ்செழியன்)

09.06.2008

 

முகப்பு

Copyright © 2004-2007 tamilthinai.com All Rights Reserved.