ஆனந்தவிகடன் வெளியிடாதது
01.11.2006 ஆம் நாள் வெளிவந்த ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்திருக்க வேண்டிய பாமாவின் காட்சிப் பிழைகள் என்னும் என் மறுப்பு வெளியிடப்படவில்லை.
தமிழ்த்திணை அன்பர் அறிய அதனைத் தருகிறேன்.
அன்புள்ள ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
25.10.2006 நாளிட்ட ஆ.வி. இதழில் தமிழ் மண்ணே வணக்கம் பகுதியில் ஆசிரியரும் படைப்பாளருமான பாமா அவர்களின் சிந்தனைகள் "சம்பள உயர்வுக்காகக் கொடி பிடித்துப் போராடுகிற, உண்ணாவிரதம் இருக்கிற, தர்ணா நடத்துகிற ஆசிரியர்கள் என்றைக்கேனும் மாணவர்கள் நலனுக்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? .......மாணவர்களின் நலனை முன்வைத்து ஒன்று திரண்டு ஒரு நாளாவது தங்களுடைய எதிர்ப்பை ஆசிரியர்கள் காட்டியிருக்கிறார்களா? எனப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரின் சிந்தனைகள் காட்சிப்பிழையாய் அமைந்திருப்பது குறித்து என் கருத்தைப் பதிவு செய்ய விரும்பியே இம்மடல் எழுதுகிறேன்.
நான் 10 ஆண்டுக்கும் மேலாக மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் தஞ்சை மண்டலத்தில்(தஞ்சை, நாகை, திருவாரூர்)பொறுப்பாளராக இருந்து பணியாற்றி வருகிறேன். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட (திருச்சி,கரூர்,புதுகை,பெரம்பலூர்,தஞ்சை,நாகை, திருவாரூர்) மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் கூட்டமைப்பான பாரதிதாசன் பல்கலைக்கழக கூட்டுக்குழுவின் தலைவராகவும் தற்போது பணியாற்றி வருகிறேன். மேலும் அகில இந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.
காட்சிப்பிழை - 1 :
சில ஆசிரியர்களின் சீரழிவான நடத்தைகளைப் பதிவு செய்துள்ளார். மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் பணிஓய்வு பெறும் சில ஆசிரியர்கள் குறித்த செய்திகள் நம்மை வியப்படைய வைக்கின்றன. பணிக் காலத்தில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர் என்றும் ஒய்வூதியமாகக் கிடைத்த ரூ.10 இலட்சத்தைத் தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்திற்குக் கொடுத்தார் என்பன போன்ற பல செய்திகள் இதில் அடங்கும்.
காட்சிப்பிழை : 2
பாமாவின் சிந்தனைகளை மேலெழுந்தவாரியாக நோக்கும்போது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் பொறுப்பற்றுப் பணியாற்றி, தண்டமாய் ஊதியம் பெற்றுக்கொண்டிருப்பதுபோல் தெரியும். இது உண்மையல்ல என்பதை உணரவேண்டும். கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டம் எதையும் நடத்தவில்லை என்பதை முதலில் உணரவேண்டும்.1988-ஆம் ஆண்டுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. மாற்றியமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் மத்திய அரசின் கடைநிலை ஊழியர் பெற்ற ஊதியத்தைக் காட்டிலும் கல்லூரி ஆசிரியரின் ஊதியமே குறைவாக இருந்தது. இந்த வேறுபாட்டை களையவேண்டி மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டம் சரியானப் பார்வையில்தான் நடத்தப்பட்டது. இதை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சுயநலத்திற்காகப் போராடினார்கள் என்றுக் கூறுவது பொருத்தமுடையதுதானா? பொதுப்புத்தியோடு சிந்திக்க வேண்டுகிறேன்.
காட்சிப்பிழை : 3
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும்போது தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியிருக்கவேண்டும். அரசு அகவிலைப்படியை உயர்த்தும் என்ற நம்பிக்கை பொய்யாய், பழங்கனவாய் மறும்நிலையை எட்டுகின்றபோதுதான் ஆர்ப்பாட்டம், தர்ணா, போராட்டம், வேலைநிறுத்தம். அகவிலைப்படியை உயர்த்தக்கோருவது ஊதிய உயர்வாகாது. அகவிலைப்படி என்பது இந்தியாவில் விற்கப்படும்
பொருள்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப புள்ளிகள் தரப்பட்டு அதன் அடிப்படையில்தான் அகவிலைப்படி அறிவிக்கப்படுகின்றது. இந்தியா முழுமைக்குமான அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடனே கிடைத்து விடுகின்றது. மாநில அரசு ஊழியர்கள் 9 மாதங்களுக்கும் மேலாக காத்திருந்து போராடி பெறவேண்டியிருக்கின்றது. இதில் யார் பொறுப்போடு நடந்துக்கொள்ளவில்லை என்பதை ஆசிரியர் பாமா அறிருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் அறியாதிருப்பதும், அகவிலைப்படியை ஊதிய உயர்வாக எண்ணியிருப்பதும் வியப்பைத் தருகின்றன. அவரின் அறியாமையைக் கண்டு வருகிறேன்.
காட்சிப்பிழை : 4
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தஞ்சை மண்டலப் பொறுப்பாளர் என்ற முறையில் மா.மீனாட்சிசுந்தரம் தலைமையில் இயங்கிவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம் எனப் பல ஆசிரியர் சங்க அமைப்புகள் மாநிலம் தழுவிய நிலையில் நடத்தப்படும் தனித்த மற்றும் கூட்டு ஆர்ப்பாட்டங்களில் போராட்டங்களில் தர்ணாக்களில் மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றியிருக்கிறேன். ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகியவற்றில் முன்வைக்கபடுவை பெரும்பகுதி மாணவர் நலன் குறித்தவையே. ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்பப்படவேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பெறப்படும் நன்கொடை உடனே தடுக்கப்பட வேண்டும். பாடச்சுமைகள் குறைக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. நான் கடந்த 6 ஆண்டுகளில் கலந்துக்கொண்டு பேசும்போது, "கல்வி நிலை தாழ்ந்து வருகிறது. உடனே அரசு கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கல்வியறிவற்ற சமுதாயம்தான் இருக்கும். இதைத்தான் தமிழக அரசு விரும்புகிறதா? அப்படியானால் நம் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் கனவான இந்தியா ஒரு வல்லரசாக எப்படி மாறும்?" குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் மாணவர்களின் பள்ளிநேரம் மாற்றியமைக்கப்பட்டபோது மாணவர் நலன் கருதி அவை மீண்டும் மாற்றியமைக்கப்பட போராடியவர்கள் ஆசிரியர்கள் என்பதை இதயமுள்ளவர்களால் மறக்கமுடியுமா? மறுக்கக்தான் முடியுமா? மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டிவரவேண்டும் என்ற தலைமையாசிரியரின் பொறுப்புணர்வை ஏற்க மறுத்த மாணவர்களின் தலைமுடியைத் தலைமையாசிரியர் வெட்டிவிட்டார் என்பது நாளிதழ்களில் மிகஅண்மையில் வெளியான பரபரப்பான செய்திகளில் ஒன்று. மாணவர் நலனில் அக்கறையில்லாது ஒரு சில ஆசிரியர்கள் இருக்கலாம். அதற்காக எல்லா ஆசிரியர்களையும் குற்றம் சுமத்தி நெற்றிக்கண்ணைத் திறப்பது நியாயமா?
காட்சிப்பிழை : 5
கல்வி நிறுவனங்களில் பெறப்படும் நன்கொடைகள், கல்விக் கட்டணம் குறித்தும் சிந்தித்துள்ளார். அரசு கல்வி நிறுவனங்களில் அரசு விதித்த கட்டணங்களுக்கு மேல் மாணவர்களிடமிருந்து பெறமுடியாது என்ற பேரூண்மையை அனைவரும் அறிவர். அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் அனைத்துக் கட்டணங்களுக்கும் இரசீது வழங்கப்படவேண்டும். வசூல் செய்யப்படும் கட்டணங்களுக்கு மண்டல/ மாவட்ட அளவிலான கல்வித் துறை சார்ந்த இணை இயக்குநர்களிடம் முன்அனுமதி பெறப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார் வந்தால் உடனே விசாரணை நடத்தப்படும். முறைகேடுகள் நடந்திருந்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுயநிதிக் கல்வி நிறுவனங்களில்தான் வரன்முறையில்லாமல் நன்கொடைகள் பெறுவது, கல்விக் கட்டணங்களை சாதாரண மக்களே அஞ்சும் அளவிற்கு உயர்த்திக் கொள்ளையடிப்பது என்ற முறை நடைமுறையாக உள்ளது. இங்கேதான் நடுத்தர மக்களின் கூட்டம் அலைமோதுகின்றது. சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் கல்வியறிவு என்பது தாகம் தீர்க்கமுடியாத கானல் நீர் என அறிந்தும் பொய்மான் கூட்டமாய் நடுத்தர மக்களின் ஆர்வம் பொங்கி வழிவதைக் காணமுடிகின்றது. இங்கே பெறப்படும் கட்டண உயர்வை எதிர்த்து அங்கே பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் வாயைக்கூடத் திறக்கமுடியாது என்ற எதார்த்த நிலையை மீறி அவர்களால் எங்ஙனம் போராட முடியும். முனைவர் பட்டம் பெற்றவர்களே சுயநிதி கல்லூரி மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளில் பணியாற்றுவோர் வாய்மூடி மெளனிகளாய் போராடும் திறனின்றி கோழைகளாய் இருக்கும்போது, இந்த அவலங்களைக் காந்தியின் குரங்களாய் பல்கலைக்கழகங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது சுயநிதிக் கல்விநிறுவன ஆசிரியர்கள் எப்படி போராட்ட வீரர்களாய் இருப்பார்கள். ஆசிரியர்கள் அடிமைகளாய் நடத்தப்படும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேற்றம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பாமா எந்த உலகத்திலிருந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
காட்சிப்பிழை : 6
ஒரு நாளாவது போராடியிருக்கிறார்களா? என பாமா கேள்வி கணைத் தொடுத்துள்ளார். நான் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் மண்டலப் பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சூன் மாதம் 31-ஆம் நாள் வரை எம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் நன்கொடையைத் தடுத்த நிறுத்த ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் மாவட்ட\ வட்டார அளவில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டு வருகின்றது. அதைப்போலவே பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தியுள்ளன. அதில் நான் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளேன். ஈரோடு கலைக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் முறையில்லாது கல்விக் கட்டணம் வசூல் செய்ததைக் கண்டித்த அக்கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்ந்தோரை நிர்வாகம் பதவி உயர்வில் பழி வாங்கியது. பதவி உயர்வுக்குத் தேவைப்படும் பணியிடைப் பயிற்சிகளுக்குச் செல்ல அனுமதிக்க மறுத்தது. பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர் நலனுக்காக ஆசிரியர் சங்கம் அனைத்து அடக்குமுறைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டது. ஈரோடு கலைக்கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து அறவழியில் பலநாள் போராட்டம் நடைபெற்றது. ஒரு நாள் போராட்டம் என் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பிரச்சனை நீதிமன்றம் சென்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வாதடி மாணவர்களிடமிருந்து அதிகம் வசூல் செய்யப்பட்ட இலட்சக்கணக்கான ரூபாய்களை மாணவர்களிடம் திருப்பித்தரும் வகையில் நீதியைப் பெற்றுத்தந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது 1020 விதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கல்லூரி நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி துணைஇயக்குநரின் கீழ் தற்போது நடந்து வருகின்றது. கல்லூரிச் செயலர் பதவி விலகி விட்டார். இந்த புரட்சியைப் போன்று பல புரட்சிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றன. அவைகள் அனைத்தும் ஊடகளில் பெரிய அளவில் வெளிவராத வகையில் செய்திகள் முடக்கப்படுகின்றன என்பதை இதன் வழியாகத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
காட்சிப்பிழை : 7
தனிப்பயிற்சி என்னும் டியூசன் படித்தால்தான் மதிப்பெண் அதிகம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துவதை சுயநிதிக் கல்விநிறுவனங்கள்தான் இதை அதிகம் வலியுறுத்துகின்றன. பல சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தேர்வு நேரங்களில் மாணவர்களை ஒட்டுமொத்தமாக காப்பியடிக்க அனுமதி கொடுகின்றது. விடைத்தாள்/மதிப்பெண் திருத்தங்களில் மோசடிப் பணிகளிலும் ஈடுபடுகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் உள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்களின் பணி என்பது ஒரு கை ஓசையாகும். அரசும் ஓசை எழுப்புகின்றபோதுதான் இருகை ஓசையாக ஓங்கி ஒலிக்கும் என்ற உண்மையை உணரவேண்டும்.
காட்சிப்பிழை : 8
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களைப் பாதிக்கும் வகையில் தேர்வுக்கட்டணங்கள் மிக அதிக அளவில் உயர்ந்து விட்டன. இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெளிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளுக்குத் தன்னாட்சி கொடுப்பது என்பது மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களைக் கிளர்க்காக்கும் முயற்சி என்று தன்னாட்சி கொடுப்பதை மிகக்கடுமையை எதிர்த்து வருகின்றது. தேர்வுக் கட்டணங்களை அதிகமாக்கி வருடத்திற்கு இரண்டுத் தேர்வு எதற்கு? தற்போதைய பருவத் தேர்வு முறையால் மாணவர் தரம் உயர்ந்துவிடவில்லை. அல்-பருவ முறையால் மாணவர்களின் தரம் தாழ்ந்துவிடவும் இல்லை. எனவே தேர்வுக் கட்டணங்களை உயர்த்துவதற்குப் பதிலாக அல்-பருவ முறையை அமல் செய்யலாமே என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மையச் செயற்குழுவில் கருத்துகளை எடுத்துவைத்துள்ளேன்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராய் பணியாற்றிய தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரி பேராசிரியர் முனைவர் இளமுருகன் அவர்கள் காவிரிப் பாசனப் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகாலம் மழை பெய்தும், கர்நாடக அரசு காவிரியில் நீர்விட கையை விரித்த நிலையில், பயிரிடப்படாத விளைநிலங்கள் பாலைவனங்களாய் காட்சியளித்தபோது பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டத்தில் காவிரி பாசனப் பகுதியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற முனைவர் இளமுருகனின் கோரிக்கையைப் பல்கலைக்கழகம் ஏற்க மறுத்தது என்ற செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டு பல மாதங்களாகியும் மதிப்பெண் கொடுக்கப்படாமையால் உயர்கல்வி பெறமுடியாதுபோன மாணவர்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி இந்நிலைப் போக்கப்பட போர்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்நாளைய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொதுச்செயலர் முனைவர் ஜெயகாந்தியும் அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலர் முனைவர் பழனியும் பேச்சுவார்த்தை நடத்தி ஆவன செய்யக் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதை பாரதிதாசன் பல்கலைக்கழகக் கூட்டுக்குழுத் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்குறித்த என் எதிர்வினையைப் "பாமாவின் காட்சிப்பிழைகள்" என்னும் தலைப்பில் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
முனைவர் தி.நெடுஞ்செழியன்,
தமிழ் - இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி (தன்னாட்சி)
மன்னம்பந்தல் - 609 305.
மயிலாடுதுறை.