இப்போது எனக்கு வயது 71.
1967இல் என் வயது 30. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல்
நடந்த காலக்கட்டம். திமுக வெற்றிப் பெற வேண்டும் என்று ஏழை எளிய மக்கள்
விரும்பினார்கள். ஆனால் வெளியில் சொல்லத் தயங்கினார்கள். காரணம் பணம் பலம்
பொருந்திய காங்கிரஸ் கட்சியுடன் திமுக மோதியது. செல்வந்தர்கள், பணக்காரர்கள்
என்று சொல்லிக்கொள்ளும் யாரும் அப்போது திமுகவில் இல்லை. அந்தத் தேர்தல்
தொடர்பான சில நிகழ்வுகள் பசுமையாய் நெஞ்சினில் நிழலாடுகின்றது. தேர்தல்
முடிவுகள் வெளிவரத் தொடங்கின. திமுக யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத
மாபெரும் வெற்றியைக் கண்டது. அண்ணா தமிழகத்தின் முதல்வராய் பொறுப்பேற்கிறார்.
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதே நேரத்தில் என் வாழ்வு என்னாகுமோ
என்ற அச்சம் மனத்திற்குள் எழுந்தது. கட்டுரைக்குள் செல்வதற்கு முன் என்
தந்தையார் குறித்தும் என் வாழ்க்கைத் துணைவர் குறித்தும் சில செய்திகளை
முதலில் பதிவு செய்கிறேன்.
என் தந்தையார் பெயர் மா.திருமலை. திருச்சி பொன்மலை இரயில்வே
பணிமனையில் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி 1977இல் ஓய்வு பெற்று பின்னர்
முழுநேர அரசியலில் ஈடுபட்டு 1980 முதல் 1993 வரை திருவெறும்பூர் ஒன்றிய திமுக
அவைத் தலைவராக இருந்தார். 1993 முதல் 2005 வரை மறுமலர்ச்சி திமுகவில் அவைத்
தலைவராக இருந்தார். 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் இயற்கை எய்தினார்.
என் தந்தையார் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் கொள்கையை வாழ்க்கையின்
இலட்சியமாக ஏற்று வாழ்ந்தவர். அண்ணாவின் திமுகவிலும் பின்னர் மறுமலர்ச்சி
திமுகவிலும் பணியாற்றிய காலங்களில் பெரியாரின் சுயமரியாதைக் கருத்திலிருந்து
ஒரு போதும் அவர் நழுவி வாழவில்லை. மேலும் தன் பிள்ளைகளையும் அவ்வாறே
வளர்த்தார். அதனால் நான் இயற்கையாகவே திராவிடர் இயக்கக் கொள்கையின்பால்
ஈடுபாடு கொண்டிருந்தது என்பதும் ஒன்றும் அதிசயமான செய்தியில்லை. தமிழ்நாடு
தமிழர்கே என்று பெரியார் கல்லூரி மாணவர் தலைவராக இருந்த என் தம்பி சாக்ரடீஸ்
1972இல் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் அடிப்படையில் 1977இல் மிசா
சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கைதியாக ஒருவருடம் திருச்சி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டான். அரசியல் தெளிவோடு நாங்கள் வளர்க்கப்பட்டோம் என்பதற்கு இவை
சான்றுகள்.
1957-இல் திருச்சிராப்பள்ளி நகரம் வரகநேரியைச் சார்ந்த ஓ.வேலு
அவர்களை வாழ்க்கைத் துணைவராக மணம் முடித்தேன். அவரும் பெரியார் பற்றாளர். இறை
மறுப்பு, மூடநம்பிக்கை என்பதை வாழ்வின் இறுதிவரை ஏற்க மறுத்தவர்.
பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து திமுக என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தால்
அண்ணா மீது திமுக இயக்கத்தினர் மீதும் என் துணைவர் கடுமையான
எதிர்ப்புணர்வுகள் கொண்டிருந்தார்.
1967 தேர்தல் களம். சூடு பறக்கும் திமுகவின் பிரச்சாரம்.
காங்கிரஸ் இயக்கம் பிரச்சாரம் செய்யாமல் ஊர் பெரிய மனிதர்களை வைத்து,
தனிநபர்களை மிரட்டி வாக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தது. நான் வாழ்ந்த
வரகநேரி பகுதி திருச்சி-1 சட்டமன்றதொகுதியைச் சார்ந்ததாகும். திராவிட
முன்னேற்றக் கழக வேட்பாளர் எம்.எஸ். மணிக்கும், திருச்சியின் மிகப் பெரிய
செல்வந்தர், திருச்சி நகரமன்றத் தலைவராக விளங்கிய லூர்துசாமிபிள்ளை காங்கிரஸ்
கட்சியின் வேட்பாளர். பெரியார் திமுகவின் மீது வெறுப்போடு இருந்தார்.
பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பணியாற்றியது. என்
துணைவர் காங்கிரஸ் இயக்கத்திற்கு ஆதரவாக நாள்தோறும் பிரச்சாரத்திற்குச்
செல்வார். நான் அமைதியாக பெண்கள் மத்தியில் திமுகவிற்கு ஆதரவாக வாக்குகள்
திரட்டுவேன். ஒரு கட்டத்தில் என் திமுக ஆதரவை ஒன்றும் செய்யமுடியாத நிலையில்
மிரட்டவும் செய்தார். இந்தத் தேர்தலில் நான் காங்கிரசுக்கு
வாக்களிக்கவேண்டும் என்றும் காங்கிரசு தோற்றால் நீ காங்கிரசுக்கு
வாக்களிக்கவில்லை என்பது வெளிச்சமாகிவிடும் என்றும் உன்னோடு வாழவும் மாட்டேன்
என்றும் அடிக்கடி மிரட்டுவார். நான் அமைதியாக திமுகவிற்கு ஆதரவாக
செயல்பட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. நடப்பது நடக்கட்டும்
என்றிருந்தேன்.
வாக்குப்பதிவு நாள் வந்தது. காலையில் வாக்களிக்கச் சென்ற
நான், என்னோடு நட்புடன் பழகும் அங்கம்மாள், அயிலம்பாள்(இவர்களின்
துணைவர்களும் காங்கிரசு ஆதரவு பெரியார் பற்றாளர்கள்) இருவரையும் அழைத்துச்
சென்றேன். வாக்குச்சாவடியில் வாக்களிக்கும்போது அந்த இருவரும் என்பேச்சைக்
கேட்டு உதயசூரியனுக்கு வாக்களித்தார்கள். யார் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள்
என்பதையெல்லாம் கண்டுபிடிக்கமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறினேன்.
வாக்களித்துவிட்டு அவர்கள் வீட்டிற்குச் செல்ல, நான் வீட்டிற்குச் செல்லாமல்
என் தந்தையார் வாழும் கீழக் கல்கண்டார்கோட்டைக்கு வந்துவிட்டேன்.
என் தோழியர்கள் இருவரும் வீட்டிற்குச் செல்ல அயிலாம்பாள் தன்
துணைவர் யாருக்கு ஓட்டுப் போட்டாய் என்பதைத் துருவித் துருவிக் கேட்க
"உதயசூரியனுக்குத்தான் போட்டேன். சண்பகவல்லிதான் யாருக்கும் தெரியாது போடு
என்றாள். போட்டேன்"
என்ற பதிலைத் தொடர்ந்து அந்த தோழிக்குக் கிடைத்த அடிக்கு
அளவில்லை. அந்த அடியைப் போலவே அங்கம்மாவிற்கும் அடி, உதை கிடைத்தது. இவர்களை
நான் தவறாக வழிநடத்தி விட்டேன் என்று என் தோழியர்களின் துணைவர்கள் புகார்
செய்ய, என் துணைவர் என்னைத் தேட, நான் ஊருக்குச் சென்ற செய்தியறிந்து
அவர் அடைந்த
கோபம் எல்லையற்றது.
பின்னர் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திருச்சி
–
1ஆவது தொகுதிக்கு திமுகவின் எம்.எஸ்.மணி வெற்றிப் பெற்றார். செல்வந்தர்
லூர்துசாமிபிள்ளை தோல்வியடைந்தார்.
மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்த அதோ நேரத்தில் என் துணைவரிடமிருந்து என்
தந்தைக்கு ஒரு செய்தி வந்தது. அது என்னவெனில், உங்கள் மகளை உங்கள் வீட்டிலே
வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மகளோடு வாழ எனக்கு விருப்பம் இல்லை என்பதாகும்.
இதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன் என்பதால் எனக்கு அதிர்ச்சி
ஏற்படவில்லை. அமைதியாகவும் இயல்பாகவும் இருந்தேன். தேர்தல் களத்தில் வெற்றிப்
பெற்ற அண்ணா, திருச்சி வந்து பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார்.
பெரியாருக்கு இந்த ஆட்சியைக் காணிக்கையாக்குகிறேன் என்ற அறிவிப்பை அண்ணா
வெளியிட்டார். பெரியாரின் நீண்டநாள் கனவான சுயமரியாதை திருமணம் சட்டப்படி
செல்லும் என்பது சட்டமாக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
பெரியாருக்கும் அண்ணாவிற்கு இடையே இருந்த இடைவெளி குறைந்து நெருக்கம்
ஏற்பட்டது. பெரியார் அண்ணாவை வாழ்த்தினார். பெரியாரின் சொற்படிதான் நடப்போம்
என்று கூறிய அண்ணா நடந்து காட்டினார். இந்தச் சூழ்நிலையில் என் துணைவரின்
கோபம் மெல்ல....மெல்ல... குறையத் தொடங்கியது. ஏறத்தாழ ஒருமாதத்திற்கும் மேலாக
என் தந்தையின் வீட்டில் இருந்தேன். பின்னர் துணைவர் அழைக்க வரகநேரி சென்றேன்.
என் தோழியர்கள் தாங்கள் வாங்கிய அடி-உதைகளைக் கூறினார்கள். நான் என் தந்தையார்
வீட்டிற்குச் சென்றதைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக, நீ சொன்னபடி
உதயசூரியன்தான் வெற்றிபெற்றது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்கள். பின்னாளில்
தந்தை பெரியார் வழியில் என் துணைவர் அண்ணாவை நேசிக்கத் தொடங்கி, அண்ணாவை புகழத் தொடங்கினார். அவரின்
நண்பர்களும்தான்.
அண்ணா
இயற்கை எய்தினார் என்ற செய்தியால் தமிழகம் முழுவதும் துயரத்தில்
ஆழ்ந்திருந்தது. வரகநேரியிலிருந்து அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில்
கலந்துகொள்ளவும் அண்ணாவை கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம்
எல்லாரிடமும் இருந்தது. என் துணைவரும் அவர் நண்பர்களும் சென்னை செல்ல லாரி
ஏற்பாடு செய்தார்கள். விடியலில் சென்னையை அடைந்தோம். யாரும் உணவு எடுத்துச்
செல்லவில்லை. வழியிலும் யாரும் சாப்பிடவும் இல்லை. காலையில் அண்ணாவின் உடல்
வைக்கப்பட்டிருந்த இராஜாஜி மண்டபத்திற்குச் சென்றோம். இறுதி அஞ்சலி
செலுத்தினோம். மாலை நடைபெற்ற அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை தற்போதைய அண்ணா
சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நின்று பார்த்தேன். அழுது.....அழுது விழிகள்
ஓய்ந்திருந்தன என்றாலும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவரும் தலையிலும்
மார்பிலும் அடித்துக் கொண்டு அண்ணா...... அண்ணா.... என்று கதறிய காட்சியால்
ஓய்ந்திருந்த என் விழிகளில் எங்கிருந்தோ கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது.
என் துணைவரும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அண்ணா தன்னை
எதிர்த்தவர்களையும் ஏற்க வைத்தார். ஏழை, எளியவர்கள் நெஞ்சில் அண்ணா
நிறைந்தார். இறுதிவரை எளிமையாக வாழ்ந்த அண்ணா நம் இதயங்களில் இன்னும்
வாழ்கிறார். என்றும் வாழ்வார்.