Tamilthinai - Tamil Research Oriented Website
Tamilthinai Team Essays Book Intro Magazine Intro Seminar Tamil Research

தமிழகத்தில் தொல்லியல் சான்றுகள்

தொகுப்பு : சு.வேலாம்பிகை

துறையூர் அருகே ஒன்பதாம் நூற்றாண்டு கால நடுகல்

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே ஒன்பதாம் நூற்றாண்டு கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. துறையூர் அருகே வைரிச்செட்டிபாளையத்தில் உள்ள வேடன் கலிங்கு அருகே வேடன் சில உள்ளதாகவும், அதை மக்கள் வழிபட்டு வருவதாகவும் கிடைத்த தகவலையடுத்து கீழக்கல்பூண்டி கல்வெட்டு ஆய்வாளர் பாண்டுரங்கன் தலைமையில் வெங்கடாஜலபுரம் பழம் பொருள் சேகரிப்பாளர் பெரியசாமி கல்வெட்டு ஆர்வலர் எழிலரசு தொல்பொருள் ஸ்தபதி வே.ராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த வேடன் சிலை சுமார் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகல் என்பதும் அதில் எழுத்துகள் பொறித்திருப்பதாகவும் தெரியவந்தது.
இதுபற்றி ராமன் கூறுகையில்,சுமார் இரண்டரை அடி அகலமும் மூன்றரை அடி உயரமும் உள்ள இந்த நடுக்கல்லில் அழகிய வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. வலது கை தன் இடையில் உள்ள வாளின் கைப்பிடியைப் பிடித்திருப்பது போன்றும், இடது கை வீரனின் உருவத்தை விட உயரமான வில்லைப் பிடித்திருப்பது போலவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
கழுத்தில் நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய  மாலையும், காலில் தண்டை போன்ற அணிகலன்களும் காணப்படுகின்றன. விசாலமான நெற்றியும் முகத்தில் முறுக்கிவிடப்பட்ட கூரிய மீசையும் இந்த வீரனின் வீரத்தையும் அழகையும் காட்டுகிறது என்றார் ராமன்.
மேலும், பாண்டுரங்கன் கூறுகையில், இந்த நடுகல்லில் உள்ள எழுத்துக்களில் தொடக்க வரிகள் ஆய்பாடி ஆநிரை வெ எனத் தொடங்குகிறது. ஒன்பது வரிகள் உள்ள இந்தக் கல்வெட்டில் கடைசி பாதி வரிகள் கட்டுமானத்தின் உள்ளேயே உள்ளதால் முழுமையாக வாசிக்க இயலவில்லை. என்றாலும், ஆய்பாடி ஆய்நிறைத் எனத் தொடங்குவதால் இந்த ஊரின் பெயர் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஆய்பாடியாக வழங்கி வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
தன்னிடமுள்ள ஆநிரைகளை பசுக்கூட்டங்களை கவர்ந்து சென்றவர்களிடமிருந்து மீட்கும்போது நடைபெற்ற சண்டையில் இந்த வீரன் இறந்து இருக்கலாம் எனவும், இறந்த இந்த வீரனின் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது என்றார் பாண்டுரங்கன்.

(தினமணி - 30 மே 2007)

 

தலையில்லா புத்தர் சிலை வலங்கைமானில் கண்டெடுப்பு

 

வலங்கைமான் அருகே தலையில்லாத புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டது. திருச்சி,தஞ்சை,திருவாரூர் மாவட்ட பகுதிகளில் தமிழ்ப் பல்ககலைக்கழக நிகர் நிலைக் கண்காணிப்பாளர் பா.சம்புலிங்கம் புத்தர் சிலைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றார். அவர் ஆய்வு செய்தபோது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வளையமாப்புரம் சிற்றூரில் புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
உழவர் ஒருவரின் நிலப்பரப்பில் இச்சிலை இருந்தது. புத்தர் சிலை 92 செ.மீ. உயரம் கொண்டதாக உள்ளது. கல்லினால் வடிவமைக்கப்பட்டுச் சோழ நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 64ஆவது புத்தர் சிலையாகும். இச்சிலையில் தலைப்பகுதி முற்றிலும் உடைந்த நிலையில் உள்ளது. புத்தர் பத்மாசனத்தில் அமர்ந்து தியான நிலையில் உள்ள இச்சிலை மார்பின் மீது மேலாடையும் புரிநூல், இடுப்பில் ஆடை போன்றவைகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் வலது கையில் சக்கரக் குறி காணப்படுகிறது. இச்சிலை 10 அல்லது 11ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்கக்கூடும் என்ற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் இராயம்புரம், தஞ்சை மாவட்டத்தில் திருவளஞ்சாழிச் சாலையில் கோபிநாத் பெருமாள் கோவிலில், திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சி ஆகிய இடங்களில் எற்கெனவே தலை இல்லாத புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோழநாட்டில் பரவலாகக் காணப்படும் புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோழநாட்டில் பரவலாகக் காணப்படும் புத்தர் சிலைகள் மூலம் இப்பகுதியில் புத்தமதம் அதிகமாகப் பரவி இருந்ததைக் காட்டுவாதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(தமிழோசை - மே 29 2007)

 

பழனி அருகே பெருங்காற்கால சின்னங்கள் கண்டெடுப்பு

 

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது தன்னாசியப்பன் கரடு. இதனைச் சுற்றிலும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மக்களின் புதைகுழிகள் பரவிக் கிடக்கின்றன.
இதே பகுதியில் உள்ள இரவிமங்கலம் என்னும் பகுதியில் உலகின் நீளமான பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ள பகுதியாகும். தொல்லியல் அறிஞர்களால் பெருங்கற்காலச் சின்னங்கள் என்று அழைக்கப்படும் இநதப் புதைகுழிகள் இறந்தவர்களை அடக்கம் செய்யப் பயன்படும் சவக்குழிகள் ஆகும். இந்லையில் தன்னாசியப்பன் கரடு அருகே விசாயத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது சுமார் 80 அடி விட்டமும் 15 அடி உயரமும் கொண்ட புதைகுழி கண்டறியப்பட்டுள்ளது.
முதுமக்கள் தாழி வைக்கப்டும் இதைச் சுற்றிலும் பலகைக் கற்கள் நான்குபுறமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதன்மேல் ஒரு பலகைக்கல் வைத்து மூடப்பட்டுள்ளது. இவற்றை அடையாளம் காண பெரிய உருண்டைக் கற்களை வைத்துள்ளனர். சிதைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் கருப்பு, சிகப்பு வண்ண பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.
மேலும் இங்கு மெருகேற்றப்பட்ட கருப்பு,சிகப்பு பானை ஓடுகள்,சிறுமண் குடுவை, இரும்புத் தாது, எலும்புகள், மண் கலயங்கள் ஆகியவையும் மற்றம் புதை குழியிலிருந்து நான்கு கால்களையுடைய குடுவை ஒன்றும் கிடந்தது.இவை அணிகலன்கள்,காசுகள் ஆகியவை போட்டு வைக்க பயன்பட்டிருக்கலாம்.
இதுகுறித்து ஆய்வு செய்த அருங்காட்சியகக் காப்பாட்சியர் பெரியசாமி,தொல்லியல் நிபுணர் நாராயணமூர்த்தி, கட்டடக் கலை ஆராய்ச்சி நிபுணர் மணிவண்ணன் ஆகியோர் கூறும்போது, இப்பகுதியில் அரிய பொக்கிஷமாகக் கருதப்படும் பழங்காலத் தமிழர்களின் புதைகுழிகள் ஏராளமாக உள்ளன. இரும்பின் பயனை அந்க்கால மக்கள் பயன்படுத்தியதற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பாக எடுத்தால் பழங்கால மக்களின் நாகரிகம் குறித்த அரிய தகவல்கள் கிடைக்கும் என்றனர். இவை பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

(தினமணி - 30 மே 2007)

 

Copyright © 2004-2007 tamilthinai.com All Rights Reserved.
Links from Tamilthinai Downloads from Tamilthinai Sitemap of Tamilthinai Contact Tamilthinai About Tamilthinai Tamilthinai Home page