எம்மைப் பற்றி
முகப்பு எம்மைப் பற்றி திணையினர் தொடர்புக்கு

தமிழ்த்திணை ஓர் ஆய்வு இதழாகும். இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களை ஆசிரியராகவும், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் அமைந்துள்ள ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் விரிவுரையாளர் வே.கண்ணையன் அவர்களை இணையாசிரியராகவும், ஏ.வி.சி.கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் தமிழ் விரிவுரையாளர் ம.இளையராஜா அவர்களைப் பதிப்பாசியராகவும் கொண்டு வெளியிடப்படுகின்றது. தமிழ்த்திணையின் இணைய வடிவமைப்பு மற்றும் ஆலோசனை பொறுப்பில் இளம்பொறியாளர் ச.குணசேகரன் உள்ளார். இவர் தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் அமைந்துள்ள தமிழ் செம்மொழித் திட்டத்தில் இணைய வடிமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்த்திணையின் தற்போதையை இணைய வடிமைப்பாளராக இளம்பொறியாளர் அ.முருக சுவாமிநாதன் செயல்பட்டு வருகிறார்.

தமிழ் மொழி செம்மொழி என இந்திய மைய அரசு அறிவித்த வேளையில் தமிழ் மொழியின் சிறப்புகளைக் குறைத்து மதிப்பீடும் ஈனச்செயல்கள் உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட இன மக்களால் ஒருமுகப்பட்ட சிந்தனையோடு நடைபெற்றன. குறிப்பாக இணைய தளங்களில் அக்குறிப்பிட்ட இனமக்களின் தமிழின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து அமைந்திருந்தது. தமிழ் இலக்கியங்களின் பெருமைகள் எந்த வித ஆய்வுப்பூர்வமான அணுகுமுறைகளின்றி சீர்குலைக்கப்பட்டன. தமிழின் பெருமைகளையும் அதன் குறைகளையும் ஆய்வு முறையில் அணுகுவது என்ற நோக்கோடுதான் தமிழ்த்திணை இணைய தளம் தொடங்கப்பட்டது. மேலும் தமிழ்ச் சமூகத்தின் சமகால நிகழ்வுகளையும் பதிவு செய்யும் தேவையை உணர்ந்தும் தமிழ்த்திணை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

2003ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஜெர்மன் வாழ் தமிழர் திருமதி சுபாஷினிகனகசுந்தரம் அவர்கள் கலந்துக்கொண்டு, தற்போதைய தமிழ் வளர்ச்சிக்கு இணையத்தின் பயன்பாடு மற்றும் தேவைகள் குறித்து உரையாற்றினார். அந்த உரைதான் தமிழ்த்திணையின் தோற்றத்திற்கு முதன்மை காரணமாக அமைந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் அம்மா இராதாசெல்லப்பன், பாண்டிச்சேரி மொழியியல் ஆய்வு மையத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்த பேராசிரியர் முனைவர் மருதநாயகம் போன்றோரின் ஆலோசனையின் பேரில் தமிழ்த்திணை என்னும் இணைய தளம் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ்த்திணை இணைய தளம் ஆய்வு இணைய இதழாக செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்த்திணை எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல்தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் கு.அண்ணாதுரை அவர்கள்.

2004 செப்டம்பர் இறுதி வாரத்தில் தமிழ்த்திணையின் சோதனை முயற்சிகள் தொடங்கின. கட்டுரைகளை PDF கோப்பாக வெளியிடுவது என்றும் இணைய தளத்தை இயங்கு (Dynamic) எழுத்துரு பாமினி கொண்டு அமைத்து பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டது. உலகத் தமிழர்களிடையே தமிழ்த்திணைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தென்கொரியா தமிழன்பர் கண்ணன் அவர்கள் தமிழ்த்திணை இணைய தளத்தை ஒருங்குறியீட்டு(Unicode) முறையில் வெளியிட ஆலோசனை வழங்கினார்.

2005ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதிவாரத்தில் தமிழ்த்திணையின் தொடக்கவிழா மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வேலாயுதம் கலையரங்கில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக அந்நாளையப் பதிவாளரும், தமிழியல் துறைத் தலைவருமான முனைவர் இராதாசெல்லப்பன் அவர்கள் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார். தமிழும் தொழில் நுட்பமும் கைகோர்த்து நடைபெறவேண்டிய இப்பணி முறையாகவும் செறிவாகவும் நடைபெற்றுள்ளது என்றும் தமிழ் இணைய தளப் பணியில் கணினி கல்வி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 2005 சூன் திங்களில், தமிழ்த்திணை சார்பில் ஏவிசி கல்லூரித் தமிழ்த்துறைப் பணியிலிருந்து ஒய்வுப் பெற்ற துறைத் தலைவர் முனைவர் கி.செம்பியன் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் மயிலாடுதுறை வாழ்க்கை திருமண அரங்கில் நடைபெற்றது. முனைவர் கி.செம்பியன் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்குத் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர். தமிழ் மாணவர்கள் தமிழ் இலக்கணம் அறியாது உள்ளனர் என்பதற்காகச் சிறுசிறு இலக்கண நூல்களை வெளியிட்டு அவற்றைக் கேட்போருக்கும் பல கல்லூரிகளுக்கும் இலவயமாகவே தன் சொந்த செலவில் அனுப்பி வைக்கிறார். இத்தகைய தமிழ் உணர்வு படைத்த செம்பியன் அவர்களின் பாராட்டுவிழாவில் கலந்துக்கொண்டு, முனைவர் கி.செம்பியன் அவர்களை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் புரட்சிப்புயல் வைகோ பாராட்டி மலர் கீரிடம் சூட்டி, சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி, வாழ்த்தி உரையாற்றினார்.

2005ஆம் ஆண்டு உலகத் தமிழர்களுக்குத் தமிழ்த்திணை அறிமுகப்படுத்திய சுபாஷினி உலகில், தமிழில் வெளிவந்த முதல் ஆய்வு இணைய இதழ் தமிழ்த்திணை என தன் வலைப்பதிவில் செய்தி வெளியிட்டார்.

2005 திசம்பர் திங்களில் தமிழ்த்திணை சார்பில் தமிழ் இதழியல் தந்தை சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு இதழியல் கருத்தரங்கம் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தொடக்கவிழாவில் அந்நாளைய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் முனைவர் கா.காளிமுத்து அவர்கள் கலந்துக்கொண்டு விழா பேரூரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து வாழ்த்துரை வழங்கினார். அவ்விழாவிற்கு தினத்தந்தி நாளிதழ் அதிபர் வணக்கத்திற்குரிய ஐயா சிவந்தி ஆதித்தன் அவர்கள் ரூ.25,000 நன்கொடை வழங்கினார். கருத்தரங்கப் பேராளர்கள் தங்குவதற்கு இடமும் இருநாள் உணவும் வழங்கி விழா சிறக்க பேருதவியாக அமைந்தவர் ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலர் வணக்கத்திற்குரிய சொ.செந்தில்வேல் அவர்கள்.சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழாவில் சி.பா.ஆதித்தனார் பெயரில் அனைத்திந்திய இதழியல் கழகம் தொடங்கப்பட்டது. இக்கழகத்தைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதியாரின் பெயர்த்தியும் தமிழில் முதல் முனைவர்ப் பட்டம் பெற்ற பெண் என்னும் பெருமை பெற்ற விஜயபாரதி அவர்கள்.

2006 ஆண்டு தொடக்கம் முதல் தமிழ்த்திணை இணைய தளத்தை ஒருங்குறியீட்டு முறைக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது, நண்பர் முருகசுவாமிநாதன் அவர்களின் உதவியோடு தற்போது தமிழ்த்திணை இணைய தளம் ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடும் முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது.

உலகத் தமிழர்களுக்கான ஒரு பெருவெளி தமிழ்த்திணை. இங்கே எல்லாரும் தங்களின் எண்ணங்களைக் கருத்துக்களை வெளியிட்டுக் கொள்ளலாம். விவாதிக் கொள்ளலாம். புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துக் கொள்ளலாம். தமிழின் உயர்வும் தமிழனின் உயர்வும் ஒன்றொன்று பின்னிப்பிணந்தவை என்ற எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி, வருங்காலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்த்திணை தன்னை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடரும். உலகத் தமிழர்களின் ஒத்துழைப்புடன்...